தமிழ் எழுத்து வரிவடிவம் – தற்போதைய வடிவம்

தமிழ் பிராமியிலிருந்து ஆரம்பித்து பிறகு பல்லவ கிரந்தம், வட்டெழுத்து வழியாக வளர்ச்சியடைந்த தமிழ் எழுத்து வடிவம், சோழர்கள் காலத்தில் தற்போதைய வரிவடிவத்துக்கு இணையாக மாற்றப்பட்டது.

பொ. யு. 8ம் நூற்றாண்டு பயன்பாட்டுக்கு வந்த இந்த வடிவம் 11ம் நூற்றாண்டு தமிழகம் முழுவதும் பரவியது. அன்றிலிருந்து இன்றுவரை சிற்சில மாற்றங்களுடன் இப்போது பயன்பாட்டில் உள்ளது.

தமிழுக்கும் மற்ற இந்திய மொழிகளுக்கும் உள்ள முக்கிய வேற்றுமை க என்று எழுத்து அது தொடர்பான எல்லா ஒலிக்கும் பயன்படுத்தப் படுவது. ஹிந்தி முதலான மொழிகளில் க, க்க என்று ஒலிகளை மாறுபடுத்தும் எழுத்துக்கள் உண்டு. இந்தத் தமிழ் வடிவத்தில் இது மிகத் தெளிவாக உறுதி செய்யப்பட்டது.

தமிழ் மொழி எழுத்து வரிவடிவங்களின் வளர்ச்சி கீழே உள்ள படத்தில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.

historyofscript

Advertisements
Posted in தமிழ் எழுத்து | Tagged

தமிழ் எழுத்து வரிவடிவம் – வட்டெழுத்து

வட்டெழுத்து முறையில் தமிழில் எழுதுவது பல்லவ கிரந்தத்திலிருந்து வந்தது என்று சிலரும் தமிழ் பிராமியிலிருந்து பல்லவ கிரந்தத்துக்கு இணையாக வளர்ந்தது வட்டெழுத்து என்று சிலரும் கூறுகின்றனர். வட்ட வடிவமாக சுழித்து எழுதுவாதல்  இந்த முறை வட்டெழுத்து என்ற பெயர் பெற்றது. முதலில் வட்டெழுத்து தென் தமிழகத்தில் தான் அதிகம் பயன்பட்டிருக்கிறது . பாண்டியர்காலக் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் வட்டெழுத்து முறையிலேதான் சாசனம் செய்யப்பட்டிருகிறது. வட்டெழுத்தால் எழுதப்பட்ட பாண்டியன் சேந்தனின்  மதுரை வைகை ஆற்றங்கரைக் கல்வெட்டு ஒன்றைக் கீழே காணலாம்.

vattezuthu
இந்தவகை எழுத்து முறை பொ.யு. 8ம் நூற்றண்டிலிருந்து 11ம் நூற்றண்டுவரை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

Posted in தமிழ் எழுத்து | Tagged

தமிழ் எழுத்து வரிவடிவம் – பல்லவ கிரந்தம் 2

இதற்கு முன்னால் இருந்த தமிழ் பிராமியிலிருந்து சில மாறுதல்கள் செய்யப்பட்டு பல்லவ கிரந்தம் உருவாக்கப்பட்டது. இந்த முறையில் உயிர்மெய்யழுத்துக்கள் முழுமையாகப் பயன்படுத்தப் பட்டன. எழுத்துக்களின் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த வரிவடிவம் செயல்பாட்டில் வந்தது. தமிழின் இப்போதைய வரிவடிவத்தில் குறிலுக்கும் நெடிலுக்கும் பயன்படுத்தப் படும் சுழிகள் பல்லவ கிரந்தத்தில்தான் முதலில் பயனுக்கு வந்தது.

பல்லவர்களின் கடல் கடந்த வாணிகம் இவ்வகை எழுத்துக்களை  தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் கொண்டு சேர்த்தது. பர்மா, இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளின் எழுத்து வடிவங்கள்  பல்லவகிரந்தத்தையே மூலமாகக் கொண்டவை. இந்தியாவில் மலையாள மொழியின் வரிவடிவத்துக்கும் இதுவே மூல வரிவடிவம்.

Posted in தமிழ் எழுத்து, தமிழ் வரலாறு | Tagged

தமிழ் எழுத்து வரிவடிவம் – பல்லவ கிரந்தம் 1

தமிழ் பிராமிக்கு அடுத்து தமிழ் வரிவடிவமாக பரவலாகப் பயன்படுத்தப் பட்டது பல்லவ கிரந்தம். அதன் பெயர் தெரிவிப்பதைப் போலவே பல்லவர்களால் ஆறாம் நூற்றாண்டு  வாக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது பல்லவ கிரந்தம்.

பல்லவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதைப் பற்றி பல்வேறு அபிப்பிராயங்கள் இருந்தாலும், முதலில் ஆட்சி செய்த பல்லவ அரசர்கள்
தமிழோடு சமஸ்கிருதத்தையும் ஆதரித்து வந்தார்கள் என்பது தெளிவு. காஞ்சியில் சமஸ்கிருதம் பயிற்றுவிக்கும் கடிகையும்  இருந்தது. தண்டி எழுதிய தசகுமார சரிதம் போன்ற சமஸ்கிருத காவியங்களும் காஞ்சியிலே இயற்றப்பட்டன.  இதனால் சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் ஏற்ற ஒரு வரிவடிவத்தைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் பல்லவர்களுக்கு இருந்தது. இது தவிர சமயம் சார்ந்தவர்களுக்கும் சாதாரணக் குடிமக்களுக்கும் ஏற்றவாறு ஒரு வரிவடிவத்தைத் தர வேண்டிய அவசியமும் அப்போது இருந்தது.

மேலே பார்ப்போம்

Posted in தமிழ் எழுத்து | Tagged ,

தமிழ் எழுத்து வரிவடிவம் – பிராமி 4

தமிழ் பிராமி எழுத்துக்கள் முதலில் மத சம்பந்தமான எழுத்துக்களுக்குப் பயன்பட்டன என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து. முக்கியமாக சமணர்களின் வாழிடங்களில் இவை அதிகம் காணப்படுவதால் இந்த முடிவுக்கு அவர்கள் வந்தனர். பிற்காலத்தில் முதுமக்கள் தாழி, நடுகற்கள் போன்றவற்றிலும் இந்த வகை எழுத்துக்கள் காணப்படுவதல் பொதுப் பயன்பாட்டுக்கும் இந்த வகை எழுத்துக்கள் நாளடைவில் வந்திருக்க வேண்டும்.

இது தவிர  இன்னொரு  முக்கியமான செய்தி, வெளிநாடுகளிலும் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டறியப்பட்டிருக்கிறது என்பதாகும். தாய்லாந்தில் ஒரு பானையில் து ர ஓ   என்ற எழுத்துக்கள் கண்டறியப்பட்டிருக்கிறது. அது துரவன் என்ற சொல்லாக, ஒரு துறவியைக் குறிப்பதாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதுபோலவே எகிப்தில் செங்கடல் அருகே  உள்ள துறைமுக நகரமொன்றில் ஒரு பானையில் ‘பானை உறி’ என்று பொறிக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டறியப்பட்டன. தமிழர்களின் கடல் கடந்த பிரயாணங்களுக்கும் வணிகத்துக்கும் இவை சான்றாக விளங்குகின்றன.

Posted in தமிழ் எழுத்து, தமிழ் வரலாறு | Tagged

தமிழ் எழுத்து வரிவடிவம் – பிராமி 3

தமிழ் பிராமி எழுத்துக்களின் வளர்ச்சியை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம் என்று பார்த்தோம். இந்த மூன்று பிரிவையும் Stage I, Stage II  மற்றும் Stage III என்று அழைக்கிறார்கள். இந்த மூன்று பிரிவுகளுக்குள்ள வேறுபாடு அடிப்படையில் உயிரெழுத்து மற்றும் உயிர்மெய் எழுத்துக்களின் வரிவடிவங்களில் உள்ளது.  உதாரணமாக ‘ந’ என்ற குறில் எழுத்து முதல்
முறையில் (Stage I)  கீழே உள்ளது போல எழுதப்படும்.

Tab1

இது ஒரு உயிர்மெய் எழுத்து என்பதைக் குறிக்க ஒரு சிறிய கோடு மேலே உள்ளதைக் கவனிக்கவும். இதுவே நா என்ற நெடிலாக எழுதப்படும்போது பக்கத்தில் ஒரு ‘அ’ சேர்க்கப்படும்

இரண்டாவது முறையில் ‘ந்’ என்ற மெய்யெழுத்துக்கும் ‘ந’ என்ற உயிர்மெய் எழுத்துக்கும் ஒரே வரி வடிவம்தான், கீழே உள்ளது போல.

Tab2

நா என்ற நெடிலை எழுதவேண்டுமானால் முதல் முறையில் பார்த்தது போல மேலே ஒரு சிறிய கோடு இடப்படும். இப்படி மெய்யெழுத்தையும் உயிர்மெய்யெழுத்தையும் ஒரே வரிவடிவத்தில் எழுதும் முறை அசோகரின் பிராமி (பிராகிருத) வடிவத்திலும் உண்டு. இதை ஆதாரமாக வைத்து தமிழ் பிராமி அசோகரின் பிராமி வரிவடிவத்துக்கு முற்பட்டது என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சரி மூன்றாவது வடிவத்தில் என்ன வேறுபாடு. இது நாம் இப்போது தமிழை எழுதும் முறைப்படி, மெய்யெழுத்துக்களை வேறுபட்டுக் காண்பிக்க, ஒரு புள்ளியை அருகில் வைக்கும் வழக்கத்தைக் கொண்டது. உதாரணமாக ந் என்ற மெய்யெழுத்து இவ்வாறு எழுதப்படும்.

Tab3

எனவே தமிழ் பிராமி கல்வெட்டுக்களைப் படிப்பதற்கு முதலில் அவை எந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவை என்று அறியவேண்டும். இல்லையெனில் எழுத்துக்கள் தவறான முறையில் படிக்கப்பட்டுவிடும்.

மேலும் …………

 

Posted in கல்வெட்டு, தமிழ் எழுத்து, தமிழ் வரலாறு | Tagged , ,

தமிழ் எழுத்து வரிவடிவம் – பிராமி 2

அசோகர் காலத்து பிராமி புத்த, சமண துறவிகளால் தமிழகத்துக்குக் கொண்டுவரப்பட்டு மாற்றம் செய்யப்பட்டது என்ற கருத்தை ஒப்புக்கொண்டோமானால் , எழுத்துக்களை வடமொழியான பிராகிருதத்திலிருந்து தமிழுக்கு ஏற்றவாறு அமைக்க சில மாறுதல்கள்
செய்யப்பட்டிருக்க வேண்டும். உதாரணமாக தமிழில் ஒரே எழுத்து நான்கு உச்சரிப்புகளில் வருவது இல்லை, (ka, kka, Ga, GGA) என்று வடமொழியில் வருவது போல.

ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் தமிழ் பிராமியின் வளர்ச்சியை மூன்று  காலகட்டங்களாக பிரிக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார். முதலாவது பொ.வ. மு. 3ம் நூற்றாண்டிலிருந்து 1ம் நூற்றாண்டு வரை. இரண்டாவது பொ.வ.1லிருந்து 2ம் நூற்றாண்டு. மூன்றாவது காலகட்டம் பொ. வ. 2லிருந்து 4ம் நூற்றாண்டு வரை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும், கர்நாடக ஆந்திர மாநிலங்களின் தென்பகுதியிலும் ஏன் இலங்கையிலும் கூட நமக்குக்  கிடைத்திருக்கின்றன. எந்த வகையில் இந்த எழுத்துவரி வடிவம் மாறுபடுகின்றது?  இதன் வரிவடிவம் எப்படி இருக்கும் என்றெல்லாம் தொடர்ந்து பார்ப்போம்

Posted in தமிழ் எழுத்து, தமிழ் வரலாறு | Tagged

தமிழ் எழுத்து வரிவடிவம் – பிராமி 1

கல்தோன்றி மண்தோன்றா காலத்து மூத்தகுடி என்று பேசப்பட்டாலும் தமிழ் ஆரம்பக்காலங்களில் பிற இந்திய மொழிகளைப் போலவே பேச்சு
மொழியாகவே இருந்திருக்கிறது. அதற்கான முதல் எழுத்துவரிவடிவம் என்று பார்த்தல் அது தமிழ் பிராமி என்று சொல்லப்படும் எழுத்துவரிவடிவமாகும்.

இந்த தமிழ் பிராமியின் மூல எழுத்து வடிவம் அசோகர் காலத்தில் பிரபலமான வடஇந்தியாவின் பிராமி என்று சொல்லப்படுகிறது. இது விஷயத்தில் கருத்து வேறுபாடு இருந்தாலும் பெரும்பாலான ஆசிரியர்கள் இந்த முடிவோடு ஒத்துப்போகிறார்கள். இந்த பிராமி எழுத்துமுறையின் துவக்கமே  இன்னும் சரிபடத் தெரியவில்லை. ஒரு சிலர் அரமைக் என்று சொல்லப்படும் மத்தியக் கிழக்கு நாடுகளில் இருந்து இது இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்கிறார்கள். இன்னும் சிலர், இன்னும் அர்த்தம் அறிய முடியாத, சிந்து சமவெளி எழுத்து வடிவத்தின் பிற்கால மாற்றமே பிராமியாக உருவெடுத்து வந்தது என்றும் சொல்கின்றனர். இதனுடைய காலத்தைப் பொருத்தவரை பொ.வ.மு 5ம் நூற்றாண்டாக  இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் பார்ப்போம்

Posted in தமிழ் எழுத்து | Tagged

தமிழகத் தலைநகரங்கள்

தமிழ் நாட்டை ஆண்ட மூவேந்தர்களும் அவர்கள் தவிர்த்த பேரரசர் குலமான பல்லவர்களும் எந்தெந்த ஊரைத் தலைநகராக வைத்து ஆண்டனர் என்பதைப் பள்ளியில் படித்திருப்போம். பாண்டியர்களின் வரலாற்றைப் பார்த்தால், தமிழிலக்கியங்கள் அவர்கள் இரண்டு தலைநகர்களில் முதலில் ஆட்சி செய்து அந்த நகரங்கள் கடற்கோளால் அழிந்தபின் மதுரையைத் தலைநகராகக் கொண்டனர் என்று தெரிவிக்கின்றன. எது எப்படியிருந்தாலும் இடைக்காலப் பாண்டியர்கள் காலத்திலிருந்து மதுரையே பாண்டியர்களின் தலைநகராக இருந்து வருகிறது.

பல்லவர்களைப் பொறுத்தவரை காஞ்சிதான் அவர்கள் ஆட்சி செய்தவரைக்கும் தலைநகர். காஞ்சிக்கு முன்னாள் அவர்களின் வரலாறு அதிகமாக அறியப்படாவிடினும் அவர்கள் ஒரு பேரரசாக இருந்தபோது அவர்களின் தலைநகர் காஞ்சிபுரம்தான்.

ஒரு நீண்ட வரலாற்றை உடைய பாண்டியர்களின் தலைநகர் மாறாமல் இருந்தபோது, சோழர்கள் அடிக்கடி தங்கள் தலைநகரை மாற்றிகொண்டு இருந்திருக்கிறார்கள். இதற்கு காரணம் என்ன என்பது ஒரு புதிர் தான். முதலில் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள் விஜயாலயன் காலத்தில் முதலில் தஞ்சையிலும் பின் பழையாறைக்கும் தங்கள் தலைநகரை மாற்றிகொண்டனர். இங்கு குறிப்பிடப்படும் பழையாறை என்பது எந்த ஊர் என்பதில் சற்றுக்குழப்பம் இருந்தது. ஒருமுகமாக இப்போது பல வரலாற்றாசிரியர்களும் ஒப்புக்கொள்ளும் இடம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள பட்டீச்வரமும் அதைச் சுற்றியுள்ள சில ஊர்களும்தான் பழையாறை என்பது. இந்த ஊரில் இருந்து மீண்டும் தஞ்சைக்கு பிரதான தலைநகர் அந்தஸ்து ராஜராஜ சோழன் காலத்தில் ஏற்பட்டது. ஆயினும் ராஜராஜன் புதல்வனான ராஜேந்திரன் தலைநகரை கங்கை கொண்ட சோழபுரத்துக்கு மாற்றினான். குலோத்துங்க சோழன் காலத்தில் சிதம்பரமும் சில காலம் தலைநகராக இருந்தது என்று தெரிகிறது.

தலைநகர் விஷயத்தில் பெரும் குழப்பத்துக்கு ஆளானது சேரர்களின் தலைநகர் தான். வரலாற்றில் வஞ்சி என்று அழைக்கப்படும் இந்த ஊரின் தற்போதைய இருப்பிடம் என்ன என்பது பற்றி பல கருத்துக்கள் நிலவி வந்தன. ஒரு சிலர் திருச்சிக்கு அருகிலுள்ள கரூர்தான் சேரர்களின் தலைநகர் என்று குறிப்பிட்டு வந்தனர். சோழர்களின் தலைநகரான உறையூருக்கு இவ்வளவு அருகில் சேரர்களின் தலைநகர் இருக்கமுடியுமா என்று கேள்வி எழுப்பினர் பல வரலாற்று ஆராய்ச்சியாளர்கள். இன்னும் சிலர் கேரளாவில் உள்ள திருவஞ்சைக்குளமே வஞ்சிமாநகர் என்று கருதுகின்றனர்.

 

Posted in சேரர், சோழர், பாண்டியர், Uncategorized | Tagged , ,

வரலாற்றில் சுனாமி

தமிழகத்துக்கு கடலரணாக அமைந்துள்ள வங்காள விரிகுடா  அடிக்கடி நகர்ந்து கொண்டிருக்கும் புவி அடுக்குகளின் மீது அமைந்துள்ளது என்று நிபுணர்கள் ஆய்ந்து தெரிவிக்கின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு புவி அடுக்குகள் அடிக்கடி அசைவுக்கு உட்பட்டிருக்கின்றன. அதனால் தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் வெள்ளங்கள் ஏற்பட்டிருக்கின்றன. சங்க இலக்கியங்கள் பலவற்றில் இதற்கான குறிப்பு காணப்படுகிறது. வெள்ளம் தவிர ஆழிப்பேரலை என்னும் சுனாமியின் தாக்குதலுக்கும் தமிழகம் உட்பட்டிருக்க வேண்டும். அத்தகைய ஒரு சுனாமியால்தான் பூம்புகார் அழிந்தது என்று கூறுவர்.

வரலாற்றுக்குறிப்புகளைப் பொறுத்தவரை பாண்டியர் செப்பேடுகளில் இத்தகைய ஆழிப்பேரலை பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. செப்பேடுகளின் முதல்பகுதியில் பாண்டியர் வம்சத்தின் பெருமைகள் பொறிக்கப்படுவது வழக்கம். அத்தகைய பெருமைகளில் ஒன்றாக கரும் வடிவமுடைய பெரிய அலைகளை பாண்டியர் தடுத்தது சொல்லப்படுகிறது. உதாரணமாக இளையான்புத்தூர் செப்பேடுகளில் “கருப்பான கடல் நீரானது நிலத்தை நோக்கி வந்தபோது அதை வேல் ஏந்தி தடுத்தவர்கள் பாண்டியர்கள்” என்று குறிக்கப்பட்டிருக்கிறது. சுனாமி நீரலைகள் கரும் வடிவமாக இருப்பது அண்மைக்காலத்தில் வந்த சுனாமியின் போது தெரிந்தது. பாண்டியர்களின் தலைநகராக இருந்த கபாடபுரமும் இதுபோன்ற ஒரு சுனாமியால்தான் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். அதிலிருந்து தன் மக்களைக் காத்த பாண்டியரின் செய்கையே இது போன்று செப்பேடுகளில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருத இடமிருக்கிறது.

Posted in சோழர், தமிழ் வரலாறு, பாண்டியர் | Tagged ,